AK 62: ஒருவழியா ஏகே 62 அப்டேட் வருதா… க்ளூ கொடுத்த லைகா… கொண்டாடித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்!

கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ட்ரெண்டாகி, எப்படா இந்தப் பஞ்சாயத்து முடியும் என ரசிகர்களையே புலம்ப வைத்து ட்ரெண்டாகி வருகின்றன ஏகே 62 அப்டேட்கள்.

துணிவு பட வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில்,  ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்புகள் சென்ற ஆண்டே வெளியாகின.

தொடர்ந்து, இந்தப் படத்தின் நடிகர்கள் தொடங்கி இசையமைப்பாளர் வரை பல அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை தாங்கள் வாங்கியுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது.

ஆனால் அதன் பின் நடந்ததெல்லாம் ஊரறிந்த கதை. விக்னேஷ் சிவன் ஏகே 62வை ட்விட்டர் பயோவிலிருந்து நீக்கியது, அஜித் படத்தை கவர் போட்டோவில் இருந்து நீக்கியது, விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காமல் அஜித் சிவப்புக் கொடி காண்பித்தது, லைகா நிறுவனம் விக்னேஷ் சிவனை வறுத்தெடுத்தது, மகிழ் திருமேனியை கமிட் செய்தது என தொடர்ந்து இணையத்தில் ஏகே 62 பற்றி தொடர் உரையாடல்கள் கடந்த ஒரு மாதமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

மகிழ் திருமேனி தான் ஏகே 62வை இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் என்று ஒருபுறம் தகவல் வெளியான நிலையில், மற்றொருபுறம் No Guts No Glory வாசகம் பொறித்த டீசர்ட்டை வெங்கட் பிரபு அணிந்தபடி வலம்வந்த நிலையில், வெங்கட் பிரபு மங்காத்தா 2 படத்தை ஏகே 62வாக இயக்குகிறார் என்றத் தகவலும் வெளியானது.

ஆனால் இறுதிவரை ஏகே 62 பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் லைகா நிறுவனம் நாளை ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடுவதாக தற்போது அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் கவனமீர்த்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த ஆண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2, லால் சலாம், ஏகே 62 படம் என நான்கு படங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு ஏகே 62 படக்குழு பற்றிய அறிவிப்பு தான் என ஆரூடம் தெரிவித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

ஏகே 62 படத்தை லைகா தயாரிக்கிறது என்பது மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகிழ் திருமேனி, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் குறித்த நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தின் ஹீரோயின் குறித்து தான் முதலில் பிரச்னை தொடங்கியதாகவும், நயன்தாராவை கமிட் செய்யப்போய் தான் விக்னேஷ் சிவன் படத்தை விட்டே நீக்கப்பட்டதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஏகே 62வில் விவேகம் படத்துக்குப் பிறகு மீண்டும் காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக இணைகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *