Actor Karthi Wishes To Kavin And His Movie DADA Team Members | Karthi On DADA : ’கவின் சிறப்பாக நடித்துள்ளார்; டாடா நல்ல திரைப்படம்;’
கவின் நடிப்பில் வெளியான ”டாடா” படத்தை பார்த்துவிட்டு நடிகர் கார்த்தி டிவிட்டரில் படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி வாழ்த்து:
பிரபல நடிகர் கார்த்தி டாடா திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் டிவிட்டர் பதிவில் ”டாடா திரைப்படம் சிறப்பாக இருந்தது. நல்ல கதை; அதை அழகாக படமாக்கியிருக்கிறார்கள். திரைப்படத்தில் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். கவின் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். நல்ல திரைப்படம் வழங்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
”டாடா” திரைப்படம்
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று அங்கேயும் தனக்கான வெற்றிப்பாதையை உருவாக்கியுள்ளார் கவின். அவரது நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம், டாடா. மணிகண்டன் என்ற கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக கலக்கியுள்ளார். எந்தவொரு பொறுப்பும் இல்லாமல் சுற்றி திரியும் நாயகனை, பிள்ளை பெற்றதுமே நாயகி பிரிந்து செல்கிறார்.
குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பும் நாயகனிடத்தில் வருகிறது. பொறுப்பற்றும் சுற்றித்திரிந்த மணி, தனது குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறார். தனது மனைவிக்கு குழந்தையை காண்பிக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு நாட்களைக் கடத்துகிறார், மணி. 4 வருடங்கள் கழித்து தனது மனைவியை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். அங்கு என்ன நடந்தது என்பது தான் டாடா படத்தின் க்ளைமேக்ஸ்.