“நான் சரத்குமாரின் ரத்தம்…” – ’கொன்றால் பாவம்’ இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த வரலட்சுமி!

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள ‘கொன்றால் பாவம்’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், சரத்குமார், சார்லி, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாம் சி.எஸ்

முன்னதாக விழா மேடையில் பேசிய இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் ”எனக்கு ரொம்ப நாளா ஒரு இசை சார்ந்த படம் பண்ண வேண்டும் என்று ஆசை. மியூசிக் இருந்தாலே அது மியூசிக் படம் என்று சொல்லி விடுகின்றனர். ஆனால் இந்தப் படம் அப்படி இருக்காது.நான் இசையமைத்த படங்களில் இதை  ஒரு முக்கியமான படமாக நான் பார்க்கிறேன்” என்றார். 

தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் சென்ட்ராயன், “நான் சரத்குமாரை பார்த்து தான் இந்த சினிமாவுக்கு வந்தேன். அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் போல உடல் வேண்டும் என ஜிம் சென்றேன். ஆனால் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. மருத்துவர் ஜிம் செல்ல கூடாது என்று சொல்லி விட்டார்” என கலகலப்பாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அனுபவ நடிகர் சார்லி, “இது என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம். அதற்காக இயக்குனருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். சிவ குமார் உடன் நடித்துள்ளேன். அவர் மகன் சூர்யா உடன் நடித்துள்ளேன். இப்படி அப்பா – மகன் என பல நடிகர்களுடன் நான் நடித்துள்ளேன். அப்பா உடன் நடித்து மகள் உடனும் நடித்தது இதுவே முதல் முறை. 

வரலட்சுமி நடிப்பைப் பார்த்து அழுத சரத்குமார்

வரலட்சுமி சரத்குமாரை எந்த மொழியில் விட்டாலும் அவர்களைப் போலவே மாறி விடுவார். இவ்வளவு மொழிகளில் இவ்வளவு பிஸியாக வேலை செய்து வருகிறார். இது எப்படி முடிகிறது என நான் நினைத்துள்ளேன். சிறந்த நடிகர்களுக்கு மொழி இரண்டாவது என்று தான் சொல்ல வேண்டும். பல நாட்கள் நாங்கள் வேலை செய்துள்ளோம். பிடித்த வேலை களைப்படைய செய்யாது. ’கொன்றால் பாவம்’ மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள்” என்றார். 

தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், “கொன்றால் பாவம் – இந்தத் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. இந்த டிரெய்லர் பார்த்த உடனே இது மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.

வரலட்சுமி இன்று சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார் என்றால் அதற்கு வரலட்சுமி தான் காரணம். ஏனென்றால் நான் அவர் சினிமாவுக்கு வரக்கூடாது என்று நினைத்தேன். கலை உலகுக்கு வரக்கூடாது என நான் நினைக்கவில்லை. ஒரு படம், ஒரு படம் என சுயம்பாக வெற்றி பெற்றுள்ளார். 

வரலட்சுமி ஒரு சுயம்பு

விஜயசாந்தி என்று அவரை சொன்னார்கள், உண்மையில் அவர் விஜயசாந்தி தான். வாழ்க்கையிலும் ஆக்சன் பண்ணுகிறார். சினிமாவிலும் பண்ணுகிறார். எல்லாம் இருந்தும் அவர் சுயமாக வந்துள்ளார். வாழ்க்கையில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தனியாக சமாளிப்பார். 

வீரசிம்மா ரெட்டி படத்தின் சில காட்சிகளை பாலகிருஷ்ணா எனக்குக் காண்பித்தார். வரலட்சுமி அதில் நடித்துள்ளார் என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரு நடிகரும் இயக்குனரும் படம் வெளியிடும் முன்பே அதை எனக்குக் காண்பித்தார்கள். அதைப் பார்த்த உடனே நான் அழுது விட்டேன். 

பெரிய படம் சிறிய படம் என்று எதுவும் இல்லை. ஓடும் படம் தான் பெரிய படம். கமெண்ட் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ரசிகர்கள் கருத்து தான் முக்கியம். சூரியவம்சம் படத்தைப் பார்த்து மிகப்பெரிய இயக்குனர் ஒருவர் என்ன படம் எடுத்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டார்.

ஆனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் ரசிகர்கள் கருத்து தான் மிகவும் முக்கியம். நாம் நம்மை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் இந்த உலகம் சிறப்பாக இருக்க வேண்டும்” எனப் பேசினார். 

தொடர்ந்து பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் “தமிழில் ரொம்ப நாள் கழித்து ஒரு திருப்தி கிடைத்துள்ளது இந்தப்படம் மூலம். கதை தான் இந்தப் படத்தில் எல்லாமே. வாழ்க்கையில் முதன்முறையாக நான் கேட்காமலேயே சம்பளம் கொடுத்தது இந்தத் தயாரிப்பு நிறுவனம் தான். 

சரத்குமாரின் ரத்தம்… வரலட்சுமி பெருமிதம்

முதல் நாள் சற்று பயமாக இருந்தது. அதன் பிறகு அது மாறியது. ஒரு காட்சியை பல முறை எடுக்கும்போது சில நேரம் சோர்வு ஆகலாம். ஆனால் இயக்குனர் வேண்டும் என்ற காட்சிகளை மட்டுமே எடுப்பார். எனக்கு மனசுக்கு பிடித்த படம் என்றால் அது கொன்றால் பாவம் தான்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய அடுத்தப் படத்தையும் தயாள் உடன் முடித்து விட்டேன். சின்னப் படம், பெரிய படம் என்று கிடையாது. ஆனால் சின்ன படமாக இருந்தாலும் இதை கொஞ்சம் புரோமோட் பண்ணுங்க.  எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சரத்குமார் ரத்தத்தில் இருந்து நான் வந்துள்ளேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *