ஏகே 62வா, பொன்னியின் செல்வன் 2வா, இல்ல இந்தியன் 2வா… நாளை வெளியாகும் பெரும் அப்டேட்… லைகா அறிவிப்பு!

நாளை பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக லைகா அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா தயாரிப்பில், இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, லால் சலாம், ஏகே 62 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 இரண்டுமே பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் படங்கள்.

எந்தப் படமா இருக்கும்?

சென்ற ஆண்டு கோலிவுட்டில் மாபெரும் வெற்றியடைந்து 450 கோடிகளுக்கும் மேல் வசூலித்து  பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில், இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 படம் பெரும் எதிர்பார்ப்புகளை எகிறவைத்துள்ளது. 

ஏற்கெனவே பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 28 வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், முன்னதாக ஏப்ரல் 5ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

இந்தியன் 2 Vs பொன்னியின் செல்வன் 2

இந்நிலையில், லைகா ஒருவேளை பொன்னியின் செல்வன் குறித்த ஏதாவது பெரிய அப்டேட்டை வெளியிடலாம் என ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு புறம் இந்தியன் 2 படம் குறித்து இன்னும் எந்த ஒரு பெரிய அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் ஒருவேளை இது இந்தியன் 2 படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்டாக இருக்குமோ என்றும் கமல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒருவேளை ஏகே 62வா?


மேலும், அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை தயாரிப்பதாக முன்னதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் இடையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்திலிருந்து  நீக்கப்பட்ட நிலையில், ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் என்றும், இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன் ட்விட்டர் பயோவிலிருந்து ஏகே 62வையும் கவர் புகைப்படத்திலிருந்து நடிகர் அஜித்தையும் நீக்கிய நிலையில், இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலேயே உறுதியானது.  எனினும் இன்று வரை அஜித் – லைகா தவிர்த்து ஏகே 62 படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் இணைய பேச்சுகளாக தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் லைகா பெரும் அறிவிப்பு என்றெல்லாம் பூடகமாக அறிவித்துள்ள நிலையில், நாளை நிச்சயம் ஏகே 62 படம் பற்றிய அறிவிப்பு தான் வெளியாக உள்ளது என அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நாளை  (மார்ச்.02) காலை 10.30 மணிக்கு லைகா பெரும் அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தான் மறைந்தாலும் தன் கலையால் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கும் முதல் சூப்பர் ஸ்டாருக்கு 114ம் பிறந்த நாள் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *