ஆந்திராவின் சிறிய கிராமத்தில், சிறிய கடையில் தோசை சாப்பிடும் பிரபல வில்லன்… வைரலாகும் வீடியோ!
ஆந்திராவின் சிறிய கிராமத்தில், சிறிய உணவகத்தில் தோசை, வடை, தோசையை சுவைத்து நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஷிஷ் வித்யார்த்தி
ஆசிஷ் வித்யார்த்தி ஒரு பான் இந்திய நடிகர் என்றாலும் இவர் அதிகமாக தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி,மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். மேலும் இவரது சிறந்த நடிப்பிற்காக 1995-ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.
90ஸ் கிட்ஸ்களுக்கு இவரை பார்த்தாலே மனதில் லேசான பயம் ஏற்படுவது இயல்புதான், அவர் நடித்த பாத்திரங்கள் அப்படி. ஆனால் உண்மையில் மிகவும் ஜாலியான, இயல்பாக பழகும் குணம் கொண்டவர் அவர், என்பது அவரது சமீபத்திய வீடியோக்கள் மூலம் தான் பலர் தெரிந்து கொன்கின்றனர்.
வீடியோ வ்ளாகிங்
இவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கத்தில் விதவிதமான உணவுகளை சுவைத்து அதுகுறித்து வீடியோ பதிவிடும் ஒரு ஃபுட் வ்ளாகராக உள்ளார். பெரும்பாலும் சிறு சிறு கடைகளுக்கு சென்று உணவருந்தி அதனை குறித்து பேசும் அவரது வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். சிறு தொழில் செய்பவர்களை ஆதரிக்கும் செயலாகவும் இதனை அவர் செய்து வருகிறார்.
தோசை சாப்பிடும் வீடியோ
அதே போல அவரது சமீபத்திய வீடியோவில், ஆந்திராவில் துர்கா ஹோட்டல் என்ற ஒரு சிறிய ஹோட்டலில் தோசை மற்றும் வடை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் தோசையை ருசித்து உண்ணும் அவர் அங்குள்ள மக்களிடம் பேசி, சிரித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார். இந்த உணவகம், ஆந்திர மாநிலத்தின், கரகம்பாடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளதாக வீடியோவில் கூறுகிறார். சிறு தொழிலை ஆதரிக்கும் விதமாக #SupportSmallBusiness போன்ற ஹாஷ்டாகுகளையும் அதில் இணைந்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
நேற்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ இதுவரை இரண்டரை லட்சம் பார்வைகளை தாண்டி பெற்று வருகிறது. மேலும் 26 ஆயிரம் பேருக்கு மேல் இதனை லைக் செய்துள்ளனர். பலர் அவருடைய மேன்மையான குணாதிசயத்தை வியந்து கமெண்ட் செய்துள்ளனர்.